உள்ளூர் செய்திகள்

ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது

Published On 2023-08-08 09:42 GMT   |   Update On 2023-08-08 09:42 GMT
  • வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது.
  • இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

வழக்கமாக சாதாரண நாட்களில் 7000 தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்பனையானது.

ஆனால் அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயர தொடங்கியது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ கடந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது.

ஈரோட்டில் 600 முதல் 800 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கிலோ கணக்கில் வாங்கிய பெண்கள் 100, 200 என்ற அளவில் தக்காளியை வாங்கி சென்றனர். ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியதால் விளையும் சரிய தொடங்கியது. ஒரு கிலோ 160-க்கு விற்கப்பட்ட தக்காளி படிப்படியாக குறைந்து ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த ஒரு வாரமாக மேலும் விலை குறைந்து ரூ.80-க்கு விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, தாராபுரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து 2000 தக்காளி தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது.

இன்று ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.70-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது. இனி வரக்கூடிய நாட்களில் வரத்து மேலும் அதிகரித்து தக்காளி விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News