எண்டோஸ்கோப் மூலம் பெண்ணுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை
- எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது.
- காப்பீடு திட்டத்தன் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பெருந்துறை:
பவானியை அடுத்துள்ள குருவரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் பவுனாயாள் (48). இவர் கடந்த 3 மாதமாக மூளை நீர் வலது மூக்கு வழியாக தன்னிச்சையாக வருவதாகவும் கடுமையான தலை வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு நவீன முறையில் சி.டி. ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூக்கின் வழியாக மூளை தண்டுவட நீர் கசிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய போதிய உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் டாக்டர்கள் உதவியுடன் அமெரிக்காவாழ் தமிழ் மருத்துவர்கள் சங்கம் சார்பாக உபகரணங்கள் வாங்கப்பட்டு அவருக்கு அதிநவீன அறுவை சிகிச்சை முறையில் வெளிபுறம் ஏதும் காயமின்றி மூக்கின் வழியாக உள்நோக்கும் கருவி மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எண்டோஸ்கோப்பி வழியாக மூளை தண்டுவட நீர் கசிவை அடைத்தல் அறுவை சிகிச்சை முதன் முறையாக பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி அறிவுறுத்துத்தலின் படி மருத்துவ கண்காணிப்பாளர் சிவராமரன் தலைமையில் காது, மூக்கு, தொண்டை மருத்துவக் குழு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த அறுவை சிகிச்சையை முடித்தனர்.
மேலும் கடந்த 12 நாட்களாக சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார். பவுனாயாள் தற்போது மூளை நீர் வருவது நின்று தலைவலி குறைந்து நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் கூறினர். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.2 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தன் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.