வடமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பின்பு நடந்த மீன்பிடி திருவிழா ஏராளமானோர் பங்கேற்பு
- வடமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பின்பு மீன்பிடி திருவிழா நடந்தது
- இதில் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வமாக மீன்களை பிடித்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள சேர்வைக்காரன்பட்டி, சொக்கன்பட்டியில் பழமையான குளம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் இது வறண்டு காணப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக குளத்தில் தண்ணீர் நிரம்பியது. இதனைதொடர்ந்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இங்குள்ள கன்னிமார் கோவிலுக்கு பொதுமக்கள் குதிரைஎடுப்பு திருவிழா நடத்தினர். அதனைதொடர்ந்து ஊர்பெரியவர் மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.
வலை மற்றும் துணிகளை கொண்டு கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு மீன்களை அள்ளிச்சென்றனர். ஒற்றுமையுடன் நடந்த இந்த திருவிழாவில் பிடிபடும் மீன்களை விற்பனைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள். தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைப்பதுடன் உறவினர்களுக்கும் மீன்களை வழங்குவது இதன் சிறப்பம்சமாகும்.
20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் வந்து பார்வையிட்டனர்.