40 வீடுகளை அகற்ற மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு
- குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர்.
- 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு குப்பம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள துலுகானத்தம்மன் கோவில் அருகே உள்ள 40 வீடுகள் மற்றும் இறால் பண்ணை ஆகியவை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நெம்மேலி ஆள வந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் மீனவ கிராமமக்கள் இடத்தை காலி செய்ய வில்லை. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சீபுரம் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சூலேரிக்காடு குப்பம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அவர்களை அப்பகுதி பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தும் அதன் முன்பு அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவ கிராம மக்களின் போராட்டத்தால் வீடுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்குள்ள இறால் பண்ணைக்கு சென்று இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று மட்டும் போர்டு வைத்து சீல் வைத்தனர்.
மேலும் அங்கு பூட்டி இருந்த வீடு ஒன்றுக்கும் சீல்வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அப்பகுதி மக்கள் அங்குள்ள துலுக்கானத்தம் கோவில் வளாகத்தில் திரண்டு உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ரவி அபிராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.