வீடுகளுக்குச் செல்லும் வழியை மறித்து உயரமாக அமைக்கப்படும் கழிவுநீரோடை
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் நாச்சனம்பட்டி ஆதிதிராவிடர் காலனி உள்ளது . இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியது. இதை தொடர்ந்து சாக்கடை வசதி வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் காடையாம்பட்டி பேரூராட்சி சார்பில் கழிவு நீர் சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நாச்சனம்பட்டி காலனி பகுதியில் உள்ள ஒரு பகுதியில் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு செல்லும் பாதியை வழிமறித்து ஒரு மீட்டர் உயரம் வரை சாக்கடை கால்வாய் அமைக்கப்படுகிறது.
இதனால் கழிவுநீர் வீட்டுக்குள் செல்லும் சூழ்நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடு மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரம் மேல் பகுதியில் அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாயை அகற்றி விட்டு குழி தோண்டி கால்வாய் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி மூதாட்டி மாரியம்மாள் கூறும் போது எனக்கு மகன் ,மகள் என யாரும் இல்லை. நான் தனியாக வசித்து வருகிறேன். தற்போது அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய் எனது வீட்டில் இருந்து 4 அடி உயரமாக உள்ளது. இதனால் நான் வீட்டிற்குள் சென்று வர முடியவில்லை. நான் வீதியில் இருந்து தவழ்ந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நான் குடிநீர் எடுத்து வர முடியவில்லை. எனவே இதை முறையாக அமைக்கவேண்டும் என்றார்.