கந்தசஷ்டி விழா : பழனி மலைக்கோவிலில் இன்று திருக்கல்யாணம்
- சூரனை வெற்றிகண்ட முருகனுக்கு தெய்வானையை திருமணம் செய்து வைக்கும் விதமாக இன்று காலை மலைக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது.
அதன்பின் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் மாலை 4.30 மணிக்கு மயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி எழுந்தருளினார். மாலை 6 மணிக்குமேல் யானை முகசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை அடுத்தடுத்து வதம் செய்து கடைசியாக சூரபத்மன் சேவலாக மாறுவதை தெரிவிக்கும் விதமாக சேவல் பறக்கவிடப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சூரனை வெற்றிகண்ட முருகனுக்கு தெய்வானையை திருமணம் செய்து வைக்கும் விதமாக இன்று காலை மலைக்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாணம் நடத்தப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.