கந்தூரி விழா; வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நாகூர் தர்கா
- 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமாக விளங்கும் நாகூர் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.
அதன்படி 466 ஆம் ஆண்டு கந்தூரி விழா டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாகூர் தர்காவின் மினாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதால் நாகூரே விழா கோலம் பூண்டுள்ளது.
தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது கண்டு பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின் கழுகு பார்வை காட்சிகள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் 02 ஆம் தேதி நாகையிலிருந்து சந்தன கூடு ஊர்வலமும் 03ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.