கல்லூரி மாணவிகளை ஏற்ற மறுக்கும் அரசு டவுன் பஸ் டிரைவர்கள்
- கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான அரசு விடுதி சேலம் சங்கர் நகர் தமிழ் சங்கம் பகுதியில் உள்ளது. இந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர்.
- அரசு பஸ்கள் முறையாக தங்களை ஏற்றிச் செல்லாத காரணத்தால் நாள்தோறும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்து இருந்தனர்.
சேலம்:
சேலம் கோரிமேடு பகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான அரசு விடுதி சேலம் சங்கர் நகர் தமிழ் சங்கம் பகுதியில் உள்ளது. இந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக அரசு பஸ் டிரைவர்கள், அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பில், பஸ்சை நிறுத்துவதில்லை என்றும், பஸ்சில் ஏறினாலும் ஓட்டுநர்கள் கீழே இறங்க வற்புறுத்துவதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் இன்று புகார் அளித்தனர். அதில் அரசு பஸ்கள் முறையாக தங்களை ஏற்றிச் செல்லாத காரணத்தால் நாள்தோறும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்து இருந்தனர்.
மாணவிகளின் புகார் தொடர்பாக சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடியிடம் கேட்டபோது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.