தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை அறுவடை தீவிரம்
- தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- நிலக்கடலை விலை அதிகரிக்க வாய்ப்பு.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் மானா வாரி நிலங்களில் மழைக் காலங்களில் விவசாயிகள் பெரும்பாலும் நிலக்கடலை சாகுபடியை அதிக அளவில் மேற்கொள் கின்றனர். பாசன வசதியுள்ள விவசாயிகள் இறவை முறையிலும் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நிலக்கடலைக்கு தண்ணீர் இன்றி காய்ந்தன. ஆனால் கடந்த, 2 மாதங்களாக இப்பகுதிகளில் கன மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், நிலக்கடலை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.
தற்போது, நிலக்கடலை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அறுவடை செய்யும் பணியில் விவ சாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டை விட இம்முறை நிலக்கடலை விளைச்சல் குறைந்து உள்ளதால், நிலக்கடலை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, ஒரு கிலோ நிலக்கடலை, ரூ.30 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.40 முதல், ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இங்கிருந்து நிலக்கடலையை, மூட்டைகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கும் விவசாயிகள் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.