கடலூரில் பரபரப்பு சாலையை ஆக்கிரமித்து கட்டிய 7 வீடுகளை இடித்து அகற்றிய அதிகாரிகள்
- வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
- 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் குப்பன் குளம் பகுதியில் மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து 7 வீடுகள் கட்டப்பட்டு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகரமைப்பு அலுவலர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர் அருள் செல்வன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கு முன்னதாக அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முன்னதாக 7 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களையும் அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்று இருந்தனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை எடுக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்து தங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து காலை முதல் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் திரண்டு இருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.