திடீரென பெய்த கன மழை: மின்னல் தாக்கி விவசாயி பலி
- பச்சை பயிறு மூட்டையின் மீது தார்பாய் போடுவதற்காக சென்றபோது மின்னல் தாக்கியது.
- காயமடைந்த இருவரும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொன்னேரி:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அவ்வகையில் இன்று மாலை பொன்னேரி சுற்று வட்டார பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொன்னேரி அடுத்த பெரும்பேடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி சரவணன் (45), செங்கழுநீர் மேடு பகுதியை சேர்ந்த வேம்புலி (60), பெரும்பேடு பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி (40) ஆகியோர் வயலில் பச்சைப்பயிறு அறுவடை செய்து கொண்டிருந்தபோது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சரவணன் பச்சை பயிறு மூட்டையின் மீது தார்பாய் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஆதிலட்சுமி மயங்கி விழுந்தார். வேம்புலிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இருவரையும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்னல் தாக்கி இறந்த சரவணன் என்பவருக்கு சரிதா என்ற மனைவியும் மஞ்சு(23), விக்னேஷ்(18) என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். திடீரென மின்னல் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.