உள்ளூர் செய்திகள்

கனமழை: குன்னூரில் பல கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியது

Published On 2024-07-30 07:03 GMT   |   Update On 2024-07-30 07:05 GMT
  • கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
  • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மிதமான மழை பெய்தது.

தொடர்ந்து மழை பெய்ததால், பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவர்கள், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழைக்கு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், தவளை மலைஅருகே, மண் சரிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.

இதனால், ஊட்டி-கூடலூர் மற்றும் கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வனப்பகுதி என்பதால், ஓட்டுனர்களும், பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்கள், பொக்லைன் வாயிலாக மண்ணை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.


மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது. சூறாவளி காற்றுக்கு குன்னூரில் உள்ள டிம்பர் டாப்ஸ் செல்லும் நடைபாதையில் மரங்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன.

இதனால் அந்த வழியாக செல்வதற்கு மக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகரட்டி, மேலும், குன்னக்கம்பை, கோட்டக்கல் பகுதிகளில் மரங்களும், கேத்தி, மணியபுரம் பகுதிகளில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.

வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

மரங்கள் முறிந்து விழுந்ததாலும், விடிய, விடிய கனமழை பெய்ததாலும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றன.

தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News