உள்ளூர் செய்திகள்

பேட்டியின் போது பாவூர்சத்திரத்தில் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டவரின் படத்தை காண்பித்த போலீசார்..

ரெயிலில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றால் கடும் நடவடிக்கை

Published On 2023-02-21 09:55 GMT   |   Update On 2023-02-21 09:55 GMT
  • அவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு உள்ளது.
  • இந்த ஆண்டு இதுவரை ரெயிலில் 52 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

தஞ்சாவூா்:

தஞ்சையில் இன்று திருச்சி இருப்பு பாதை ரெயில்வே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

திருச்சி ரெயில்வே மாவட்ட இருப்பு பாதைக்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. வனிதா, டி.ஐ.ஜி. டாக்டர் விஜயகுமார் ஆகியோர் உத்தரவுப்படி எனது மேற்பார்வையில் மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் உட்பட 30 போலீசார் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் , பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த அனீஸ் (வயது 27) என்பதும், அவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து குற்றவாளி அனீசை கைது செய்தோம்.

மேலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள் மற்றும் குழந்தைகளிடம் யாரேனும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டாலோ அல்லது ரெயில்வே பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். திருச்சி இருப்பு பாதை காவல் மாவட்டத்தில் உள்ள தனிப்படையினர் தமிழ்நாட்டில் கஞ்சாவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு விரைவு ரெயில்களான பகத்கிகோதி, பாட்னா- எர்ணாகுளம், தன்பாத், ஹெவுரா -திருவனந்தபுரம், ஹெவுரா- ஆலப்புழா மற்றும் எஸ்வந்த்பூர் ரெயில்களில் இன்று சோதனை நடத்தினோம். அதில் எஸ்வந்த்பூர் ரயிலில் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். இந்த ஆண்டு இதுவரை ரெயிலில் 52 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. ரெயிலில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்தி சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News