உள்ளூர் செய்திகள்

கோவையில் கஞ்சா, புகையிலையை ஒழிக்க முக்கியத்துவம்

Published On 2023-01-27 09:25 GMT   |   Update On 2023-01-27 09:25 GMT
  • கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பாராளுமன்றம், சட்டசபை போல கிராமசபையும் மிக முக்கிய அமைப்பாகும்

கோவை,

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 228 பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. பெரும்பாலான ஊராட்சிகளில் கஞ்சா, புகையிலை தங்கள் கிராமங்களில் விற்க அனுமதியில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

கிணத்துக்கடவு ஒன்றியம் அரசம்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சமீரன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கிராம மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துதல், பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் உள்ளிட்ட முடிவுகளை கிராமசபை கூடி தான் முடிவெடுக்கிறது. பாராளுமன்றம், சட்டசபை போல கிராமசபையும் மிக முக்கிய அமைப்பாகும் என்றார். கூட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவோம் மற்றும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

சூலூரை அடுத்த செலக்கரச்சல் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலை பொருள் விற்க அனுமதிப்பதில்லை என்றும், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இவற்றை பயன்படுத்துவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கோவை சின்னதடாகம் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இந்தநிலையில் நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், 24 வீரபாண்டி போன்ற செங்கல் தொழில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் செங்கல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் சார்பில் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஒற்றைய சாளரமுறையில் செங்கல் தொழிலை அனுமதிக்க வேண்டும் என வலயுறுத்தப்பட்டது.

அரிசிபாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் போதை பொருள் இல்லாத பகுதியாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

Similar News