காரிமங்கலம் தாலுகா அலுவலக வளாகத்தில் பழத்தோட்டம், பூந்தோட்டம் அமைக்கும் பணிகள் தீவிரம்
- தாலுக்கா அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகளில் புதர் மண்டி கிடந்தது.
- பழத் தோட்டம் மற்றும் பூந்தோட்டம் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
தாலுக்கா அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகளில் புதர் மண்டி கிடந்தது. இதை தாலுகா அலுவலக அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றி பயனளிக்கும் வகையிலும் பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையிலும் பழத் தோட்டம் மற்றும் பூந்தோட்டம் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தாலுகா அலுவலக வளாகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு பழங்கள் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து பூந்தோட்டம் அமைக்க 100-க்கும் மேற்பட்ட ரோஜா செடிகளை நட்டு வைத்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் பங்களிப்புடன் பல்வேறு மரக்கன்றுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான பணியை தாசில்தார் சுகுமார் தலைமையில் ஆர்.ஐ. மணி துணை தாசில்தார் கமருதீன் மற்றும் வி.ஏ.ஓ.க்கள், அலுவலக ஊழியர்கள் செய்துள்ளனர்.