உள்ளூர் செய்திகள்

திருநங்கைகள் அழகில் மயங்கி ரூ.65 ஆயிரத்தை இழந்த வாலிபர்- மீட்டு கொடுத்து எச்சரித்து அனுப்பிய போலீசார்

Published On 2023-04-25 08:46 GMT   |   Update On 2023-04-25 08:46 GMT
  • திருநங்கைகளின் அழகில் மயங்கிய அந்த வாலிபர், மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அவர்களுடன் சென்றார்.
  • புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை அழைத்துக்கொண்டு சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த எம்.செட்டிப்பட்டியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், மாடுகளை விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு சென்றார். அங்கு மாடுகளை விற்பனை செய்துவிட்டு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி புறப்பட்டார்.

5 ரோடு பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளை அந்த வாலிபர் பார்த்தார். வாலிபரை கண்டதும், திருநங்கைகள் பேச்சு கொடுத்தனர். அப்போது திருநங்கைகளின் அழகில் மயங்கிய அந்த வாலிபர், மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அவர்களுடன் சென்றார். அவரை திருநங்கைகள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு சில மணி நேரம் கழித்து அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று தந்தையிடம் பணத்தை கொடுத்தார். அதனை எண்ணி பார்த்த போது ரூ.1 லட்சம் மட்டும் இருந்தது. ரூ.65 ஆயிரத்தை காணவில்லை. இதைக்கண்டு அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சேலம் விரைந்து வந்தார். இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை அழைத்துக்கொண்டு சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர். அங்கு நின்ற திருநங்கைகளை அந்த வாலிபர் அடையாளம் காட்டினார். உடனே போலீசார் அந்த திருநங்கைகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்தான், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினார். அவருடன் நாங்கள் நீண்ட நேரம் செலவிட்டோம். அதற்காகத்தான் அவர் ரூ.65 ஆயிரத்தை கொடுத்தார் என்றனர்.

உடனே போலீசார் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.65 ஆயிரத்தை வாங்கி அந்த வாலிபரிடம் ஒப்படைத்தனர். அப்போது திருநங்கைகளிடம் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று கூறினர்.

மேலும் வாலிபரிடம், இவ்வளவு பணத்தை கொண்டு போகிறோமே என்ற அச்சம் கூட இல்லாமல் திருநங்கைகளை கண்டு சபலபட்டு இருக்கிறீர்களே என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News