குடிமங்கலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு - கவுன்சிலர்கள் புகார்
- ஊராட்சிகளில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது.
- அதிகாரிகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமங்கலம்,
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் புஸ்பராஜ் தலைமை வகித்தார்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம் (தி.மு.க.,) தமயந்தி (அ.தி.மு.க.,) உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:-
பெரியபட்டி, வாகத்தொழுவு, மூங்கில்தொழுவு உள்ளிட்ட ஊராட்சிகளில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்புக்குள்ளாகின்றனர். குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று பெற வேண்டியதுள்ளது.திருமூர்த்தி அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து போதுமான அளவு தண்ணீர், கிராமங்களை வந்தடைவதில்லை.குடிநீர் வடிகால் வாரியம், ஒன்றிய அதிகாரிகளிடம், பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்வதும் கிடையாது. மூங்கில் தொழுவில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இப்பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அப்போது அதிகாரிகள் பதில் அளிக்கையில், குடிநீர் வடிகால் வாரிய திட்டத்தின் வாயிலாக ஊராட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து வழங்கப்படுகிறது. தற்போது தெரிவிக்கப்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்துநடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.