உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2023-03-04 09:28 GMT   |   Update On 2023-03-04 09:28 GMT
  • சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு 2021-2022 ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது.
  • .1,00,000 ரொக்கப் பரிசுத் தொகையும் தமிழ்நாடு முதல் அமைச்சரால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தனிநபர், நிறுவனம், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள் , கல்லூரிகள் , தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர்களை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருது வழங்க சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு 2021-2022 ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட உள்ளது. மேலும் 2022-2023-ம் ஆண்டிற்கான இவ்விருது பெற கீழ்கண்ட துறைகளில் ஈடுபாட்டுடன் செயல்படும் தகுதியான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தனிநபர், நிறுவனம், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள் , கல்லூரிகள் , தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள், நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர்பாதுகாப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு, மாசு குறைப்பு, நெகிழி பயன்பாட்டை குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழலை மறுசீரமைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை தருமபுரி மாவட்ட கலெக்டரின் தலைமையிலான மாவட்ட விருதுக் குழுவின் மூலமாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் 2023-ம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன்-5 ம் நாள் 'தமிழ்நாடு பசுமை சாதனையாளர்" விருதும், ரூ.1,00,000 ரொக்கப் பரிசுத் தொகையும் தமிழ்நாடு முதல் அமைச்சரால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பம் குறித்த தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்கொண்ட தங்களின் செயல்பாட்டை உரிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் 15.04.2023-க்குள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அதியமான் கோட்டை, ஓசூர் புறவழிச்சாலை, சோகத்தூர் அஞ்சல், ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், தருமபுரி வட்டம், தருமபுரி மாவட்டம் (தொலைப்பேசி எண் 04342-270005) என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News