மஞ்சூர் அருகே தேயிலை எஸ்டேட் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை
- தேயிலை எஸ்டேட் தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது.
- கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.1.96 லட்சம் ஆகும்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தாய்சோலா. இப்பகுதியை சேர்ந்த லிங்கன் என்பவரது மனைவி கமலா அங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
கமலா அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் சீட்டு பிடித்து வருகிறாராம். இந்நிலையில் சம்பவத்தன்று கமலா சீட்டு பிடித்த பணம் ரூ.45ஆயிரம் மற்றும் சேமிப்பு பணம் ரூ.47ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.92 ஆயிரம் மற்றும் 8 சவரன் தங்கநகை ஆகியவற்றை ஒரு பையில் சுற்றி வீட்டில் உள்ள சாமி படம் முன்பு வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி பார்த்தபோது சாமி படத்தின் அருகில் வைத்திருந்த நகை, பணம் அடங்கிய பை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பட்டப்பகலில் வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து லிங்கன் மஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி தலைமையில் விரைந்து சென்ற போலீசார் விசாரனை நடத்தினார்கள். கொள்ளை போனது ரொக்கப்பணம் ரூ.92 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சத்து 4ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தங்க நகை ஆகும். இதன் மொத்த மதிப்பு ரூ.1.96 லட்சம் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் தாய்சோலா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.