கள்ளக்குறிச்சி மாணவி உடலுக்கு இன்று இறுதி சடங்கு- இறுதி ஊர்வலத்தில் வெளி ஆட்கள் பங்கேற்க தடை
- மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு.
- இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்று கொள்ள வேண்டும், இன்று மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
மாணவியின் இரு உடற்கூராய்வு அறிக்கைகளையும் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இந்த வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார். நேற்றைய விசாரணையின்போது மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், பெற்றோர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது. வெளி ஆட்களோ, பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் அறிவுறுத்தினர்.