குமரி கடலில் மாயமாகி மீட்கப்பட்ட கடியபட்டணம் மீனவர்களுடன் தி.மு.க. மீனவர் அணி நிர்வாகி, பிரின்ஸ் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல்
- 19-ந் தேதி கரை திரும்பாதவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மீனவர்களின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
- அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மாயமான மீனவர்களை மீட்டு கரை சேர்த்தது
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே கீழ கடிய பட்டணத்தை சேர்ந்தவர் எட்வின் ஜெனில் (வயது 34). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 18-ந் தேதி பிற்பகல் வழக்கம்போல் கடியபட்டணத்தை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளர்கள் சார்லஸ் எட்வின் (45), பிரான்சிஸ் (71), ஜோசப் (63), சகாய பெனின் (33) ஆகியோருடன் எட்வின் ஜெனில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். மறுநாள் 19-ந் தேதி கரை திரும்ப வேண்டும். ஆனால் கரை திரும்பவில்லை. அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மேற்கூறிய மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்தது.இரவு 5 மீனவர்களும் பத்திரமாக கரை சேர்ந்தனர்.
கரை திரும்பிய மீன வர்களை தி.மு.க.மாநில மீனவர் அணி இணை செயலாளர் நசரேத் பசலியான், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் நேற்று கடியபட்டணம் சென்று சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆறுதல் கூறினர்.