உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் அரசு பள்ளிகளை சேர்ந்த 973 மாணவ-மாணவிகள் பயன்பெறும் காலை உணவு திட்டம்

Published On 2022-09-16 10:11 GMT   |   Update On 2022-09-16 10:11 GMT
  • கலெக்டர் அரவிந்த் இன்று தொடங்கி வைத்தார்
  • வாட்டர் டேங்க் சாலையில் ஒரு மைய சமையல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது

நாகர்கோவில்:

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். தனது கனவுத் திட்டம் என இதனை அறிவித்த அவர், மதுரையில் நேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இன்று செயல்படுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் இன்று 19 தொடக்கப் பள்ளிகளில் 973 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. நாகர்கோவில் செட்டிகுளம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். கலெக்டர் அரவிந்த் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கினார்.

நாகர்கோவில் பகுதியில் காலை உணவு திட்டத்துக்காக வாட்டர் டேங்க் சாலையில் ஒரு மைய சமையல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அங்கு தயாராகும் உணவினை 2 மூடியுடன் கூடிய வாகனத்தில் தினசரி (திங்கள் முதல் வெள்ளி வரை) பள்ளி வேலை நாட்களில் காலை 8.15 மணிக்குள் கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

விழாவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்தமோகன், தி.மு.க. மாநகர் செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News