திங்கள் முதல் வெள்ளி வரை தக்கலையில் இருந்து நாகர்கோவிலுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.
கன்னியாகுமரி:
தக்கலை-நாகர்கோவில் வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் அதிக பயணிகள் கூட்டம் அரசு பேருந்துகளில் நிரம்பி வழிகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக் கட்டில் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் எந்த பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. பேருந்து ஸ்டாப்புக்கு முன்னரோ, பின்னரோ இறக்கி விட்டு மட்டும் செல்கின்றனர்.
இதனால் யாரும் ஏறவும் முடியாது.இதில் அரசு பேருந்து ஓட்டுனர்களை குறை கூறி எந்த பயனும் இல்லை, ஏனென்றால் பேருந்தில் நிற்க கூட இடமில்லாத நிலை உள்ளது. இலவச பேருந்து சேவை வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு செல்லும் இலவச பேருந்தை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதால், முக்கிய பணிகளுக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், இலவச பேருந்தில் ஏற முடியாத நிலை உள்ளது. மார்த்தாண்டத்திலிருந்தே பேருந்தில், நாகர்கோவில் வருபவர்களும் பல இன்னலுக்கு உள்ளாவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே காலை-மாலை வேளைகளில், குறிப்பாக திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.