கனரக லாரிகள் செல்ல அரசு உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு
- அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
- குமரி மாவட்ட மக்களின் உயிரை அடகு வைக்க முடியாது
நாகர்கோவில் :
நாகர்கோயிலில் காதி கிராப்ட் தீபாவளி தள்ளுபடி துணி விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைகள் இல்லாததாலும் குறுகலான சாலைகள் காணப்படுவதாலும் அதிகனரக வாகனங்களுக்கு வரையறை செய்யப்பட்டு உள்ளது.
அதி கனரக வாகனங்களில் கற்களை கேரளா வுக்கு ஏற்றி செல்வது தொடர்பாக பலமுறை லாரி உரிமையாளர்கள் மற்றும் கல்குவாரி உரிமையாளர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைத்து பேசிய நிலையில் உரிய தீர்வு எடுக்கப்படாத நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களது பேராசைக்காக மாவட்ட மக்களின் உயிரை அடகு வைக்க முடியாது என்பதால் தற்போது அதி கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த வரையறைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து அரசின் சார்பில் மேல் முறையீடு செய்ய ஆலோசித்து வருகிறோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கற்களை கொண்டு செல்வதை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது. மத்திய அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை 10 கிலோமீட்டர் சுற்றளவு என்பதை பூஜ்யம் முதல் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு என குறைத்ததும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை மாநில அரசால் தடுக்க முடியாது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் தீர்மானித்ததும் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வதை தடுப்பதற்கு சவாலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.