திருப்பதிசாரத்தில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
நாகர்கோவில் :
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை யடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் தயாராகி வருகிறார்கள். பெரும் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று நடந்தது.
திருப்பதி சாரம் தெப்பக் குளத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்ட னர். இதில் தெப்பக்குளத்தில் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தத்ரூபமாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
குளத்தில் மூழ்கியவரை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலமாக கட்டி கரைக்கு இழுத்து வந்து மீட்பது எப்படி? என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட வாலிபரை கரைக்கு கொண்டு வந்து ஸ்ட்ரெச்சர் மூலமாக அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வமாக பார்வையிட்டனர். இதே போல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளிலும் குளங்களிலும் தீயணைப்பு துறையினர் இன்று பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இது குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், மழை நேரங்களில் தண்ணீர் பெருகி வெள்ளம் ஏற்பட்டால் அதிலிருந்து தங்களை தற்காத்து கொள் வது மிகவும் அவசியமாகும்.
அதற்கு வீட்டில் தண்ணீரில் மிதக்கக்கூடிய கேன், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தால் அவற்றின் மீது தொங்கியவாறு வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றார்.