உள்ளூர் செய்திகள்

வடசேரியில் காரில் லிப்ட் கேட்டு சென்று நகை-பணம் பறிப்பு

Published On 2023-03-12 06:40 GMT   |   Update On 2023-03-12 06:40 GMT
  • கூகுள்பே கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரத்தையும் திருடிய கும்பல்
  • வடசேரி பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்

நாகர்கோவில் :

நாகர்கோவில் பார்வதி புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று மாலை தனது காரில் பூதப்பாண்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

வடசேரி அண்ணாசிலை அருகே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் கையை காட்டி காரை நிறுத்தினார். இதையடுத்து கார் நின்றது. அப்போது அந்த வாலிபர் தான் தாழக்குடி செல்ல வேண்டும் என்றும் தன்னை அழைத்து செல்லுமாறும் கூறினார். உடனே அவர் தனது காரில் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தாழக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென 4 பேர் காரை வழிமறித்தனர்.

காரை நிறுத்தியதும் அந்த கும்பல் காரை ஓட்டி சென்றவரிடமிருந்த ரூ.2000 ரொக்கப்பணத்தை பறித்தனர். மேலும் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்த கும்பல் அவரது கூகுள்பே கணக்கிலிருந்து ரூ.75 ஆயிரம் பணத்தையும் திருடியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. காரில் லிப்ட் கேட்டு வந்தவரும் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து பூதப் பாண்டி போலீசில் காரை ஓட்டி வந்தவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். லிப்ட் கேட்டு வந்த வாலிபர் தான் திட்டமிட்டு இந்த கை வரிசையில் ஈடு பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வடசேரி பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் தாழக்குடி பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். காரில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு வந்து நகை பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News