கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பயிர் கடன், நகைக்கடன், சுய உதவி குழு கடன் ஆகியவைகளுக்கு வட்டி இழப்பு இன்றி சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும்
- ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
பயிர் கடன் வழங்குவதில் விதிமீறல் என்று கூறி பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கடன் தள்ளுபடி திட்டத்தில் பயிர் கடன், நகைக்கடன், சுய உதவி குழு கடன் ஆகியவைகளுக்கு வட்டி இழப்பு இன்றி சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும், தவணை தவறிய நகைக்கடன்கள் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டுள்ள இழப்பு தொகைக்கு சங்க பணியாளர் பொறுப்பாக்கப்பட்டு ஓய்வு கால நிதி பலன்களை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், இழப்புத் தொகையை நட்ட கணக்கிற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட் ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார், இணை செயலாளர்கள் ரமணி, வசந்த பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அப்போது வெயில் சுட்டெரித்தது. எனினும் வெயிலை பொருட்படுத்தாமல் கையில் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.