கலெக்டர் அலுவலக பகுதியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்
- பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென தனது 2 பவுன் நகையை காணவில்லை என்று கூச்சலிட்டார்
- பஸ்சில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது
நாகர்கோவில் :
திங்கள் சந்தையில் இருந்து வெள்ளிச்சந்தை வழியாக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு இன்று காலை அரசு பஸ் வந்தது. பஸ்சில் காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பஸ் வந்தபோது பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென தனது 2 பவுன் நகையை காணவில்லை என்று கூச்சலிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
பெண் பஸ்சில் நகையை தேடி பார்த்தார். எனினும் நகை கிடைக்கவில்லை. இதையடுத்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு அண்ணா பஸ் நிலையத்துக்கு சென்றது. பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பஸ் பஸ் நிலையத்திற்கு செல்வதற்குள் போலீசார் அங்கு வந்தனர். பஸ்சை விட்டு இறங்கிய பயணிகள் அனைவரையும் சோதனை செய்தனர். ஆனால் நகை சிக்க வில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை திருடியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
ஆனால் சம்பவம் நடந்தபோது நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் என்பதால் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியாகும். எனவே அங்கு தான் புகார் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். கோட்டார், நேசமணி நகர் போலீசார் மாறி மாறி நகை இழந்த பெண்ணை அலைக்கழித்ததால் அந்த பெண் புகார் கொடுக்காமலையே திரும்பி செல்லும் சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே பஸ்சில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதேபோல் இன்றும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. போலீசார் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.