கொட்டாரம் ஆசிரியர் தம்பதி வீட்டில் கொள்ளை - உள்ளூர் நபர்கள் கைவரிசையா?
- 12 பவுன் நகை, ரூ.27 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது
- மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை
கன்னியாகுமரி :
கொட்டாரம் சந்திப்பில்இருந்து பெரியவிளை செல்லும் சாலையில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர் தங்கராஜ் (வயது58).
இவர் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெபராணி பிரபா (52) இவர் களக்காட்டில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் நேற்று வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில்இருந்த 12 பவுன் நகை, ரூ.27 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.இதனையடுத்து அவர், கன்னியாகுமரிபோலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கன்னியாகுமரி டி. எஸ்.பி.ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த ஆசிரியரின் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர்.தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் சோதனை செய்த பின்னர் அஞ்சுகிராமம் செல்லும் சாலை வழியாக சென்று பொட்டல்குளம் வழியாக சுந்தரபுரம் சந்திப்பு வரை சென்றது.
ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. எனவே இந்த சம்பவத்தில் உள்ளூர் நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் வீட்டில் இருந்து 12 பவுன் தங்க நகை மற்றும்ரூ.27 ஆயிரம்ரொக்க பணம்ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்து உள்ளது.பட்ட பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கொட்டாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.