உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. இளைஞர் அணியினரின் இருசக்கர வாகன பேரணியை போலீசார் தடுத்ததால் பரபரப்பு

Published On 2022-06-07 10:22 GMT   |   Update On 2022-06-07 10:22 GMT
  • பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் கார் பேரணியாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர்.
  • தகவல் அறிந்ததும் குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

கன்னியாகுமரி:

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை களை விளக்கி கன்னியா குமரியில் இருந்து சென்னை வரை இருசக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை முடி யும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் மாநில பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா தலைமையில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜன்,

எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., பேரணியின் ஒருங்கிணைப்பாளர் நயினார் பாலாஜி, மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் சுபாஷ், கன்னியாகுமரி நகர தலைவர் கனகராஜன் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் வட்டார தலைவர்கள் சுயம்பு, சுயம்புலிங்கம் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துராமன் மீனாதேவ் உள்பட திரளான பாரதிய ஜனதாவினர் திரண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந் ததும் குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் பாரதிய ஜனதாவினரிடம் இருசக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். உடனே அங்கு திரண்டிருந்த பாரதிய ஜனதாவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியாக பாரதிய ஜனதா தலைவர்களுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கார் பேரணி நடத்த அனுமதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் கார் பேரணியாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர். அவர்களை காந்தி மண்டபம் முன்பு இருந்து பாரதிய ஜனதா கட்சியினர் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News