போக்குவரத்து நெருக்கடியை குறைக்க செட்டிக்குளத்தில் ரவுண்டானா - மேயர் மகேஷ் ஆய்வு
- செட்டிகுளம் பகுதியில் காலை மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி
- சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் காலை மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும், செட்டிகுளம் சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில்ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து செட்டிகுளம் பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் இன்று காலை செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டனர்.
இதேபோல் மணிமேடை பகுதியிலும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது.இதேபோல் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு முதற்கட்ட ஆய்வு நடத்தியுள்ளோம். அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கப் படும். ரவுண்டானா அமைக்கப்படும்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும் .மேலும் மணிமேடை பகுதியில் ரவுண்டானாவை சுற்றி வாகனங்கள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது பொறியாளர் பால சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் முத்துராமன்,ஜவகர் மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் கவுன்சிலர்கள் சந்தியா, ரமேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் உடன் சென்றனர்.