உள்ளூர் செய்திகள்

வட்டக்கோட்டைக்கு படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கவசங்கள்

Published On 2023-05-28 09:06 GMT   |   Update On 2023-05-28 09:06 GMT
  • 131 பயணிகள் சாதாரண இருக்கைகளுடன் பயணம் செய்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
  • பாதுகாப்பு கவசத்துடன் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் சுமார் ரூ.8.24 கோடி மதிப்பில் திருவள்ளுவர், தாமிரபரணி என்ற பெயர் கொண்ட சுற்றுலா சொகுசு படகு வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தாமிரபரணி நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 75 சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 19 சுற்றுலா பயணிகள் அமரும் வகையிலும், 131 பயணிகள் சாதாரண இருக்கைகளுடன் பயணம் செய்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குளிர்சாதன இருக்கையில் பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.450-ம், சாதாரண இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.350-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 படகுகளும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்தில் இருந்து புறப்பட்டு, சின்ன முட்டம் வழியாக வட்டக்கோட்டை கடல் பகுதியை சென்றடைந்து மீண்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்திற்கு வந்து சேரும்.

இந்நிலையில் திருவள்ளுவர், தாமிரபரணி நவீன சொகுசு படகில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் பயணம் மேற்கொள்ள பூம்புகார் மேலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதற்கிணங்க, சொகுசு படகில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பு கவசத்துடன் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

Tags:    

Similar News