கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை
- போட்டி போட்டு மக்கள் வாங்கி சென்றனர்
- விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு நடவடிக்கை
கன்னியாகுமரி :
மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் தோட்டகலைத்துறை சார்பில் முதற்கட்டமாக டான்ஹோட விற்பனை மையத்தில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தக்காளி விற்பனையை குமரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இன்று வடசேரி உழவர் சந்தை டான்ஹோட விற்பனை மையத்திலும் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.