ஆரல்வாய்மொழியில் காரில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம்
- புகையிலை பொருள்கள் பறிமுதல்
- அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் ஒரு கார் வெகு நேரமாக நின்றது. அதன் டிரைவர் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அதனை அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர். அவர்கள் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கிருஷ்ணகிரி குப்பச்சிபாறை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காருக்குள் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 20 சாக்கு மூடைகளில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன. அதுபற்றி விசாரித்த போது, விஜயன் என்பவர் கூறியதின் பேரில் கிருஷ்ணகிரியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்ததாக பிரகாஷ் தெரிவித்தார்.
புகையிலை பொருட்களை அவர் குமரி மாவட்டத்தில் சப்ளை செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து கடத்தி கொண்டு வந்துள்ளார். இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் டிரைவர் பிரகா சும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.