கரந்தை கருணாசுவாமி கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
- 34 ஆண்டுகளுக்கு பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது.
- பல்லக்கு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கரந்தை கருணாசுவாமி கோவில் எனப்படும் வசீடேஸ்வரர் கோவிலில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது.
கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன் ஆகியோரும், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் ஆகியோரும் எழுந்தருளினர்.
பின்னர் சுங்கான் திடல், பள்ளி அக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூர், குருங்கலூர் வழியாக சென்ற பல்லக்கு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தங்கியது.
நேற்று காலை மீண்டும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு புறப்பட்டு பக்தர்கள் புடைசூழ சின்ன அரிசிக்கார தெரு, கீழவாசல் ,அரண்மனை உள்பட பல்வேறு இடங்களின் வழியாக சென்று கருணாசுவாமி கோவிலுக்கு இரவில் சென்று அடைந்தது.
இதனைத் தொடர்ந்து பல்லக்கில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்பட பலர் கலந்து கொண்டனர்.