கிருஷ்ணராயபுரத்தில் 28 சென்ட் அரசு நிலம் மீட்பு
- கிருஷ்ணராயபுரத்தில் 28 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது.
- அந்த நிலத்தில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கம்பிவேலி அமைக்கும் பணி நடைபெற்றது
கரூர்
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முருகன் கோவில் பின்புறம் 28 சென்ட் அரசு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். பின்னர் அந்த நிலத்தில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கம்பிவேலி அமைக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க கரூர் அல்லது குளித்தலை மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். கிருஷ்ணராயபுரம் தாலுகா மருத்துவமனை கோவக்குளத்தில் அமைந்துள்ளது. ஆனால் இங்கு போதிய பஸ் போக்குவரத்து வசதி இல்லை. எனவே தற்போது பேரூராட்சி அலுவலர்களால் மீட்கப்பட்ட 28 சென்ட் நிலத்தில் மருத்துவமனை அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.