நாமக்கல் அருகே வழிப்பறி சம்பவம்: கைதான பேஸ்புக் நண்பர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு
- நாமக்கல் அருகே வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
- இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்த யோகேஸ்வரன், மணிகண்டன் , வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
நாமக்கல்:
ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). இவர் கிச்சன் வேர் என்ற பெயரில் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு குமாரபாளையம் கலைவாணி தெருவை சேர்ந்த யோகேஸ்வரன் (26) என்பவர் பேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமானார். இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளாத நிலையில் பேஸ்புக்கில் பழகி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி கோபிநாத் தனது வாடிக்கையாளரை சந்திக்க குமாரபாளையத்திற்கு சென்றார்.இதனை அறிந்த யோகேஸ்வரன், கோபிநாத்தை நேரில் சந்தித்து பேச வேண்டும் என தெரிவித்தார். மேலும் பைபாஸ் ரோட்டில் அருவங்காடு பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அவரை சந்திக்க கோபிநாத் அருவங்காட்டுக்கு சென்றார். அங்கிருந்த யோகேஸ்வரன், அவரை அங்குள்ள மலைக்கரடு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு குமாரபாளையம் ஸ்ரீரங்க செட்டியார் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (27), பண்டாரி கோவில் வீதியை சேர்ந்த வினோத்குமார் (21) ஆகியோர் வந்தனர். 3 பேரும் சேர்ந்து கோபிநாத்தை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின், பாக்கெட்டில் வைத்திருந்த 18,000 பணம், வெள்ளி கொடி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை அங்கிருந்து அடித்து விரட்டினர்.
இது குறித்து கோபிநாத், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார் . இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்த யோகேஸ்வரன், மணிகண்டன் , வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் .பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது இதேபோல மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு சிறையில் அடைத்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.