கோத்தகிரி-மார்க்கெட் சாலையை ஒரு வழிச்சாலையாக பயன்படுத்த வேண்டும்
- முக்கியமான கடைவீதி பகுதி என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
- மார்க்கெட் சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.
அரவேணு,
கோத்தகிரியில் இருந்து மார்க்கெட் செல்லும் சாலையானது ஒரு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அரசு பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளி, வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் செல்லக்கூடிய சாலையாகும். அது மட்டும் இன்றி கோத்தகிரி முக்கியமான கடைவீதி பகுதி என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். காலை மற்றும் மாலையில் பள்ளி குழந்தைகள் ஏராளமானார் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்பொழுதும் இச்சாலை மிகவும் நெரிசலாகவும், பரபரப்பாகவும், மக்கள் அதிகம் நடமாடக்கூடிய சாலையாக இருக்கிறது. இருந்தபோதிலும் இச்சாலையை 2 வழிச்சாலையாக பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் செய்து வருகின்றனர். அது மட்டும் இன்றி மார்க்கெட் சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது. இருந்தபோதிலும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இது வியாபாரத்திற்கும், பொதுமக்கள் நடப்பதற்கும் வெகு சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதை ஒரு வழிச்சாலையாக மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.