உள்ளூர் செய்திகள் (District)

கடல் பசுவை காப்பாற்றி மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு மனோரா கடற்கரையில் பாராட்டு விழா நடைபெற்றது.

கடல் பசுவை காப்பாற்றி மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு

Published On 2023-01-12 09:23 GMT   |   Update On 2023-01-12 09:23 GMT
  • மந்திரிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
  • தங்கள் வலையை அறுத்து அந்த கடல் பசுவை மீண்டும் உயிருடன் கடலில் மீனவர்கள் விட்டனர்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மந்திரிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது மீனவர்கள் வலையில் அவுரியா எனப்படும் அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு சிக்கியது.

இதையடுத்து, தங்கள் வலையை அறுத்து அந்த கடல் பசுவை மீண்டும் உயிருடன் கடலில் மீனவர்கள் விட்டனர்.

இதற்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மனோரா கடற்கரையில் தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தலைமையில் நடந்தது. தமிழ்நாடு வனத்துறை சார்பில் மீனவர்கள் 11 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ், சேதமடைந்த மீன் வலைக்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் மொத்தம் ரூ.1 லட்சம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வன அலுவலர் பேசியதாவது:- அபூர்வ வகை உயிரினங்களான கடல் பசுவை அனைவரும் பாதுகாக்க வேண்டும். கடல்வாழ் உயிரினங்களின் வாழுமிடமான கடற்பா சிகளை உருவாக்குவதில் அவுரியா முக்கிய இடம் வகிக்கிறது.

கடல் பசு அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இவற்றை பிடிக்க கூடாது.

கடல் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கினால், கடல்பசுவின் காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்து கடலுக்குள் மீண்டும் விடும் வகையில் மீன்வளத்துறை, வனத்துறை சார்பில் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், வனச்சரகர்கள் குமார், ரஞ்சித், வனவர் சிங்காரவேலு, கடலோர காவல்துறை உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜலீலா பேகம் (சரபேந்திரராஜன்பட்டினம்), முரளி (திருவத்தேவன்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மீனவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News