ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கோவில் கும்பாபிஷேகம்
- அன்னூர் அருகே கரியாக்கவுண்டனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது.
- 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. மேலும் புதிதாக செல்வ விநாயகர் கோவிலும் கட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அம்மன் அழைப்பு, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
கோவிலில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் வேதமந்திரங்கள் ஓதப்பட்டு நான்கு கால யாக வேள்விகள் நடத்தப்பட்டது
இதனைத் தொடர்ந்து இன்று காலை செல்வ விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் கோலா கலமாக நடை பெற்றது.சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்த புனித நீர் யாக சாலையில் இருந்து எடுத்து வரப்பட்டு விமான கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டர் மூலம் மேல் இருந்து பல வண்ண மலர்கள் தூவப்பட்டது. விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.