உள்ளூர் செய்திகள் (District)

மாதவரம்-சிறுசேரி இடையே அமையவிருந்த 6 ரெயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு

Published On 2023-03-10 04:02 GMT   |   Update On 2023-03-10 04:02 GMT
  • குறைந்த தூரத்தில் அடுத்தடுத்த ரெயில் நிலையங்கள் அமைவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • 6 ரெயில் நிலையங்கள் அமைப்பதை கைவிடுவதன் மூலம் திட்டப்பணிக்கான செலவில் ரூ.1,200 கோடி வரை குறையும்.

சென்னை:

சென்னை மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் நடந்து வருகிறது. 2026-ம் ஆண்டுக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரெயில் பாதையில் 48 சுரங்க ரெயில் நிலையம் உள்ளிட்ட 128 ரெயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இரு ரெயில் நிலையங்களுக்கு இடையே 750 மீட்டர் குறைவான தூரத்தை கொண்டுள்ள டவுட்டன் சந்திப்பு, பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, மாதவரம் தபால் பெட்டி, ஜோசப் கல்லூரி ஆகிய 6 இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கும் முடிவை கைவிட மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

குறைந்த தூரத்தில் அடுத்தடுத்த ரெயில் நிலையங்கள் அமைவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் அனைத்தும் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டு வருகிறது.

மாதவரத்தில் தபால் பெட்டி என்ற இடத்தில் மிக குறுகிய வளைவு இருப்பதால் ரெயில் நிலையத்தை பராமரிப்பது சவாலானது என்பதால் அங்கு ரெயில் நிலையம் அமைப்பது கைவிடப்பட்டது.

மாதவரம் பால் பண்ணை மற்றும் முராரி ஆஸ்பத்திரி ரெயில் நிலையங்களில் இருந்து தபால் பெட்டி ரெயில் நிலையம் முறையே 980 மீட்டர் மற்றும் 684 மீட்டர் இடைவெளியில் அமையவிருந்தது.

இதேபோன்று மீனாட்சி கல்லூரி ரெயில் நிலையமும், கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து வெறும் 725 மீட்டரில் அமையவிருந்தன. இதுபோன்று 6 ரெயில் நிலையங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் குறைவான இடைவெளியில் அமைக்க திட்டமிட்டிருந்ததால் இவற்றை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட பணியின்போது சென்னை சென்டிரல்-ஓமந்தூரார் ரெயில் நிலையத்துக்கு இடையே 1½ கிலோ மீட்டர் தூர இடைவெளி இருந்தது. இதனால் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா அருகே இரு ரெயில் நிலையங்களுக்கும் இடையே ஒரு அவசரகால வெளியேற்றும் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

2-ம் கட்ட பணியிலும் ரெயில் நிலையங்கள் கைவிடப்பட்ட பகுதிகளுக்கு இடையே அவசரகால வெளியேறும் பகுதி அமைக்கப்படலாம்.

6 ரெயில் நிலையங்கள் அமைப்பதை கைவிடுவதன் மூலம் திட்டப்பணிக்கான செலவில் ரூ.1,200 கோடி வரை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News