உள்ளூர் செய்திகள்

சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்குடையில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடை

Published On 2022-09-13 08:31 GMT   |   Update On 2022-09-13 08:31 GMT
  • சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
  • மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவனியாபுரம்

மதுரை அவனியாபுரம் முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெருங்குடி, திருமங்கலம், காரியாபட்டி, வலையங்குளம், மண்டேலாநகர், பர்மா காலனி, மீனாட்சிபுரம், அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் செல்லும் பஸ்கள் என 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் அவனியாபுரம் வந்து செல்கிறது.

அவனியாபுரத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் என இந்த பகுதியில் இருந்து அதிக பஸ்கள் செல்கின்றன. இவைகளில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிர–த்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய அவனியாபுரம் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

இவர்கள் பயன்பெறும் வகையில் 2 நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிழற்குடைகள் சேதமடைந்து பயணிகள் உயிரை காவு வாங்கும் நிலையில் உள்ளது. ஒரு நிழற்குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிழற்குடையை சீரமைக்காமல் கம்பு வைத்தும், கயிறுகளாலும் தடுத்துள்ளனர்.

மற்றொரு நிழற்குடை இலைக்கடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அமர இடமில்லாமல் தவிக்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக முதியோர்கள் மாதாந்திர மாத்திரை வாங்க வருவதுண்டு. அவ்வாறு வரும் முதியோர்கள் அதிக தூரம் நடக்க முடியாமல் இந்த நிழற்குடையில் அமர்ந்து செல்வதுண்டு. ஆபத்தான நிலையில் பஸ் பயணிகளுக்கான நிழற்குடை இருப்பது முதியோர்களை அச்சப்பட வைக்கிறது.

விரைவில் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News