குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா
- குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார்.
சோழவந்தான்
குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபெயர்ச்சி ஆனார். குருபெயர்ச்சி விழா 3 நாள் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை லட்சார்ச்சனை தொடங்கியது. நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று இரவு 9 அளவில் மணி பரிகார மகா யாக பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதர்பட்டர், ரங்கநாதபட்டர், சடகோப பட்டர், ஸ்ரீ பாலாஜிபட்டர், ராஜாபட்டர் உள்பட 15 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதி யாகபூஜை நடத்தினர். இதைத்தொடர்ந்து மகாபூர்ணா குதி நடந்து அர்ச்சகர்கள் புனித நீர் குடங்களை சுமந்து மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தனர்.
குருபகவானுக்கு திரு மஞ்சனம், சிறப்பு அபி ஷேகம், ஆராதனை செய்தனர். குருபகவான்- சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது. குருபெயர்ச்சியை யொட்டி குருவித்துறை கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி யுடன் குருபகவானை தரிசித்தனர். கொரோனோ தொற்றுநோய் காரணமாக அரசு உத்தரவின்படி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் ஆகியோர் போலீசாருடன் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தர், சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசார், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோழவந்தானில் இருந்து குருவித்துறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் பாலமுருகன், பணியாளர்கள், நாகராஜ், மணிபிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.