ஒரு முறை ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும்
- வங்கிகளில் கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும் என அரசின் உத்தரவுக்கு கப்பலூர் தொழிற்சங்கம் பாராட்டு தெரிவித்தது.
- கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
கப்பலூர் தொழிற்சங்கம் சார்பாக 30-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கப்பலூர் தொழிற்சங்கத்தில் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர் ரகுநாத ராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது அணுகு சாலையை முழுமையாக பயன்படுத்திச் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய மின்சார கட்டண உயர்வு, சிறு மற்றும் குறு தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக கட்டணம் ஏற்றப்படாவிட்டாலும், தற்போதைய உயர்வு சுமார் 32 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகி உள்ளது. இதனால் வெளி மாநில உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியாமல் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கட்டணம் குறைப்பதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது சிறு, குறு தொழில்கள் உற்பத்தி வெளி மாநில தொழிலாளர்களை நம்பும் நிலை உள்ளது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக அரசு அளிக்க வேண்டும்.
வங்கிகளில் தொடர்ந்து கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும் என்ற அரசின் முடிவிற்கு கப்பலூர் தொழிற்சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.