குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- மதுரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் சூழல் ஏற்பட்டது.
மதுரை
தென்மேற்கு பருவமழை குறைந்ததால் மதுரை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் மதுரை நகரில் 100 வார்டுளிலும் போதியளவு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் 25-வது வார்டான பி.பி.குளம் பகுதியில் உள்ள இந்திராநகர், முல்லை நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.குடிநீருக்காக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் சூழல் ஏற்பட்டது.
சாலை மறியல்
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி இன்று காலை பி.பி.குளம் மெயின்ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து லாரி மூலம் அந்த பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.