- திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் துணிகளை துவைக்க அனுமதிக்ககோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் நடந்தது.
- இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உட்பட்டது சரவணப் பொய்கை. புனித தீர்த்தமான இங்கு பொதுமக்கள் துணிகளை துவைக்கவும், குளிக்கவும், ரசாயன கலவைகள் உபயோகப்படுத்துவதால் தண்ணீர் மாசடைந்து அசுத்தம் ஏற்பட்டது.
இதனை தடுக்கும் வகையில் இந்த பகுதி மக்கள் சலவை செய்ய ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை அருகில் குளியலறை மற்றும் சலவை கூடம் கட்டப்பட்டது. அதில் பொதுமக்கள் சலவை செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் சலவை கூடத்தில் துவைக்க செல்ல மாட்டோம், பாரம்பரியமாக சரவணப்பொய்கையில் துணிகளை துவைத்து வருகிறோம். மீண்டும் எங்களுக்கு அந்த பகுதியில் துணிகளை துவைக்க அனுமதியளிக்க வேண்டும் என்றுகூறி பொதுமக்கள் சில நாட்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அேத கோரிக்கையை வலியுறுத்தி இன்று சரவணப் பொய்கை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ெபாதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் புனித தீர்த்தமாக பயன்படுத்தும் சரவணப்பொய்கை பகுதியில் சலவை செய்து அசுத்தம் ஏற்படுத்துவதால் சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் முற்றிலும் மாசடைந்து, அதில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதையடுத்து மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சரவணப் பொய்கையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது சரவணப் பொய்கை தூய்மையாக இருக்கும் நிலையில் அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சரவணப் பொய்கை பகுதியில் ரசாயன கலவைகள் கொண்டு துணிகள் துவைப்பதற்கு தடை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.