சமுதாய கூடம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை
- சமுதாய கூடம் கட்டித்தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊரின் மையபகுதியில் போதிய இட வசதி உள்ளதால் சமுதாயக்கூடம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட. நரிமேடு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
முல்லையாறு பிரிவு பாசன கால்வாய் கரை யோரம் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு செல்ல போதிய அகலமான சாலை இல்லாத நிலையில் இது வரை பஸ் வசதிகள் இன்றி மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். வெளியூர் பயணத் தேவை களுக்கு மோட்டார்சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாக னங்களை கிராம மக்கள் பயன்படுத்தி வரும்நிலை உள்ளது.
கிராமத்தினர் காதணி விழா மற்றும் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளை நடந்த அங்கு மண்டபங்கள் இல்லை. இதனால் கிராம மக்கள் வாடிப்பட்டி அல்லது சோழ வந்தான் நகர் பகுதிக்கு சென்று மண்டபங்களை வாடகைக்கு பிடித்து விசேஷங்களை நடத்தும் நிலை உள்ளது. இதனால் கால விரயமும் செலவும் ஏற்படுகின்றது. இதுகுறித்து நரிமேடு கிராம மக்கள் கூறுகையில், இங்கிருந்து வெளியூர் செல்ல மினிபஸ் வசதி கூட இல்லாததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரமுள்ள நாச்சிகுளம் அல்லது வாடிப்பட்டிக்கு நடத்து சென்றுதான் பஸ் ஏறி வெளியூர்களுக்கு சென்று வருகின்றோம்.
இந்த நிலையில் வீடுகளில் நடக்கும் விஷேச நிகழ்ச்சிகளுக்காக உறவினர்கள் அழைத்து வெளியூர்களூக்கு சென்று தனியார் மண்டபத்தில் அதிக வாடகை பணம் கொடுத்து விசேஷங்களை நடத்தி வருகின்றோம்.
ஊரின் மையபகு தியில் போதிய இட வசதி உள்ளதால் சமுதாயக்கூடம் கட்டிதர மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.