உள்ளூர் செய்திகள்

கொலையுண்ட சூர்யபிரகாஷ்

கள்ளழகர் விழாவுக்கு வந்தபோது மோதல்- மதுரை வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர்

Published On 2023-05-06 10:39 GMT   |   Update On 2023-05-06 10:39 GMT
  • வைகை ஆற்றின் வடகரை ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் வைத்து 10 பேர் கும்பல் சூர்யபிரகாசை சரமாரியாக தாக்கியது.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது23). இவர் பி.ஏ. படித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்தநிலையில் மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கடந்த 4-ந்தேதி இரவு சூர்ய பிரகாஷ் தனது நண்பர்களுடன் சென்றார்.

அவர்கள் மதிச்சியம் அம்பலத்தார் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 10 பேர் கும்பல், இளம்பெண்களை கிண்டல் செய்துள்ளது. இதனை கண்ட சூர்ய பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வைகை ஆற்றின் வடகரை ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் வைத்து 10 பேர் கும்பல் சூர்யபிரகாசை சரமாரியாக தாக்கியது. அவர்கள் கைக்குட்டையால் அவரது கழுத்தை நெரித்தனர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சூர்யபிரகாஷ் மயங்கி விழுந்தார். இதனால் அச்சமடைந்த 10 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

இதையடுத்து சூர்ய பிரகாசை அவரது நண்பர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக மதிச்சியம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிளை கண்டுபிடிக்க சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சூர்ய பிரகாசை தாக்கியவர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். கொலையுண்ட சூர்ய பிரகாஷ், ராஜரத்தினத்திற்கு ஒரே மகன் ஆவார்.

Tags:    

Similar News