மானூர் அரிவாள் வெட்டு சம்பவம்: மாணவரின் உறவினர்கள் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகை - குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை
- அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
- இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர் ஆருண் (வயது 21). கல்லூரி மாணவர். இவரது உறவினர் ஆபிரகாம் (19).
அரிவாள் வெட்டு
நேற்று முன்தினம் இவர்கள் ஊரின் வடக்கே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆருணை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது.
தகவலறிந்து இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆருணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அரி வாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் தாழையூத்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கொலை முயற்சி, தீண்டாமை பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், இளைஞரணி முத்துப்பாண்டி, தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் மற்றும் பலர் வந்தனர். பின்னர் அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் எங்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மாணவனை அரிவாளால் வெட்டிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.