தஞ்சை பெரிய கோவிலில் மேயர்- ஆணையர் ஆய்வு
- தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
- சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை நிறுவி தமிழர்களின் கட்டிடக்கலையை உலகறிய செய்த சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் "சதய விழா"வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் விழா மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.
அதன்படி நாளை தொடங்கும் விழா நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பெரிய கோவிலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மேயர் சண். ராமநாதன் கூறியதாவது :-
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட , இந்த ஆண்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் வந்தாலும் அதற்கேற்றவாறு பல்வேறு வசதிகளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 3 -ம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.